, குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல் தாரியான மொஹமட் அஸாத்தின் உடற்பாகம், மட்டக்களப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில், ஈஸ்டர் ஞாயிறுத் தினத்தன்று குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல் தாரியான மொஹமட் அஸாத்தின், உடற்பாகம் நேற்று மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது.
நேற்று இரவு மிகவும் இரகசியமான முறையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவனமானது தற்போது மட்டக்களப்பில் பாரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், இதற்கு கடுமையான எதிர்பினை வெளியிட்டு இன்று மட்டக்களப்பு பிரதான வீதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதில் கலந்துகொண்டிருந்த மக்கள், தாக்குதல் தாரியின் உடற்பாகங்களை வேறு இடத்தில் புதைக்க வேண்டும் என்றும் இதுவிடயம் குறித்து அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
மேலும், இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக இருப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம்வரை இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.