உலக நாடுகளிலும் ஒரு சிறிய குழுவினரே பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளை அனைவரும் செய்வதில்லை. ஒரு சிறிய குழுவினரே இந்த பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இந்த செயற்பாடுகள் இலங்கைக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளுக்கும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் இவ்வாறான ஒரு சிறு குழுக்களினாலேயே பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நாங்கள் ஒரு விசர் நாய்களாகவே பார்க்கின்றோம்.
இந்த நாட்டில் கடந்த 10 வருடத்திற்கு மேலாக அமைதி நிலவிவந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் என்பது இலங்கை மக்கள் பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த காரணத்தினால் இந்த நாட்டில் பல சம்பவங்கள் நடந்தேறியது.
யுத்த காலத்தில் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. அந்த உயிர்களை நாங்கள் மீள கொண்டுவரமுடியாது. அவ்வாறான சூழ்நிலை இந்த நாட்டில் எப்போதும் ஏற்படக்கூடாது” என மேலும் தெரிவித்தார்.