உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரிடத்திலான கேள்வி நேரத்தின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் இந்த கேள்வியை தொடுத்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான காணிகளுக்கான உறுதிப்பத்திரம் இல்லாத நிலைமை உள்ளது. இவற்றை கொடுப்பதற்கு அரசாங்கம் பல கருத்துக்களை கூறுகின்றது ஆனால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள என்ன செய்யப்போகின்றது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.
இதேவேளை மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்ட பல ஏக்கர் காணிகளில் மக்கள் குடியேறியுள்ளனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
நீண்ட காலமாக மக்கள் குடியேறி இருந்தாலும் கூட மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் உறுதிப்பத்திரம் இல்லாத நிலைமை உள்ளது.
ஆகவே மக்களுக்கு எப்போது காணி உரிமங்களை வழங்குவீர்கள். அதற்கான கால வரையறையை தயவுசெய்து கூற வேண்டும்” என எஸ்.ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டார்.