அதேவேளை அடுத்தவர்களின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கமாட்டோமெனக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்போமே தவிர ஓடியொழிய மாட்டோம் எனவும் கூறினார்.
நாவலப்பிட்டியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் காரியாலயத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த காரியாலயம் திறந்துவைக்கும் நிகழ்வில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், நாவலப்பிட்டி நகரசபையின் தலைவர் சங்க சம்பத் சஞ்சிவ உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “அரசாங்கம் எங்களுடையது என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது.
இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எவ்வித வேறுபாடுகளும் இல்லாமல் இன, மத ரீதியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தாலே சமத்துவம் ஏற்படும். சமத்துவம் ஏற்பட்டாலே நாட்டின் மக்களிடயே ஐக்கியம் காணப்படும்.
ஆனால் ஐக்கியம் எனக்கூறிகொண்டு அரசாங்கத்தின் காலடியில் நாங்கள் சரணடயவில்லை. எந்த அரசாங்கம் வந்தாலும் கெஞ்சும் பழக்கம் எமக்குக் கிடையாது. எமக்கு உரித்தானதை, தேவையானதை கேட்டுத்தான் பெற்றுக்கொள்கிறோம்.
அடுத்தவர்களின் உரிமைகளை நாம் என்றும் பறிக்கமாட்டோம். ஆனால் எமது உரிமைகளை எவரையும் தட்டிப்பறிக்கவும் விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.