குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்புக்கு பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, தனது நிலையை விளக்கி சமூகவலைத்தளமொன்றில் உதவி கோரியிருந்தார்.
ஒன்றாறியோவைச் சேர்ந்த ஆயிஷா குர்ரம் (20 வயது) என்ற பெண் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட நிதி நிர்வாக துறையில் பயின்று வருகிறார்.
ஆயிஷாவின் தாயார் நீண்ட காலமாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிக மன அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த ஆயிஷா தொடர்ந்து கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்த தருணத்தில் சமூகவலைத்தளத்தின் வாயிலாக உதவி கோரலாம், யாராவது உதவினால், அதைக் கொண்டு கல்வியைத் தொடர முயற்சி செய்யலாம் என ஆயிஷா தீர்மானித்தார்.
எனவே, தனது நிலைமையை விளக்கி இணையத்தில் உதவி கோரினார். சில மணி நேரங்களின் பின்னர் ஆயிஷாவின் தொலைபேசியில் ஒரு அறிவிப்பு வந்தது.
அதில் பிரபல அமெரிக்க பொப்பிசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் ஆயிஷாவுக்கு 6,386.47 அமெரிக்க டொலர்கள் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் டெய்லர், ஆயிஷாவுக்கு ஒரு செய்தியையும் அனுப்பியிருந்தார். அதில் ‘Ayesha, get your learn on, girl! I love you, Taylor!’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மகிழ்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்ட ஆயிஷா, இனி தனது கல்லூரி படிப்பைத் தொடர்வதில் பிரச்சினையில்லை என்றும், தனக்கு, டெய்லர் ஸ்விஃப்ட் தனக்கு பண உதவி செய்ததை நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் ஆயிஷா பதிவிடும் இடுகைகளை டெய்லர் விரும்புவது இயல்பான ஒன்றாகும். ஒரு முறை தன்னை சந்திக்குமாறு டெய்லர் அழைப்பு விடுத்த நிலையில், அவரது நிகழ்ச்சி ஒன்றின் போது, டெய்லரை ஆயிஷா சந்தித்துள்ளார்.
இருந்தபோதும், தன்னை நினைவு வைத்து மிகப் பெரிய பிரபலம் தனக்கு உதவி செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று ஆயிஷா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
ஆனால், டெய்லர் தனது ரசிகர்களுக்கு கல்வி கற்க உதவுவது இது முதல் முறையல்ல.
ரெபேக்கா போர்ட்னிகர் (Rebekah Bortniker) என்ற மாணவிக்கு, கல்விக் கடனை திரும்பச் செலுத்துவதற்காக 1,989 டொலர்களை டெய்லர் அன்பளிப்பாக அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.