தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் காசிமுடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றனர் என்ற குற்றச்சாட்டில் மௌவிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஹெட்டிப்பொல மற்றும் நிக்கவெரடிய ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் காசிமின் நுவரேலியா பயிற்சி முகாமில் மௌவிகள் இருவரும் ஆயுதப் பயிற்சி பெற்றனர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.
அதனடிப்படையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவர்கள் இருவரையும் இன்று கைது செய்தனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் 200 பேர் வரை பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.