கனடா நாகனடாவின் ஒன்ராறியோ பகுதியில் உள்ள முக்கிய நகரத்திற்கு தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கனடா நாட்டின் ஹோல்டன் பகுதியில் துணை பொலிஸ் அதிகாரியாக நிஷ் துரையப்பா பணிபுரிந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்தவராவார். பொலிஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் (Peel) நகரத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
இது குறித்து நிஷ் துரையப்பா கூறுகையில், ‘3000 பொலிஸாரை கொண்டுள்ள பீல் நகருக்கு தலைமை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டமை மிகவும் பெருமையான ஒன்று. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இவரை பீல் நகருக்கு உட்பட்ட மிஸ்சிசவுகா முதல்வர் போனி குரோமி வரவேற்றார். நிஷ் துரையப்பா யாழ்ப்பாணத்தின் முன்னாள் முதல்வர் ஆல்ஃப்ரட் துரையப்பாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.