நுவரெலியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நாட்டில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே நடைபெற வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பொருத்த வரையில் யார் வேட்பாளர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
அடுத்த ஜனாதிபதி மலையக மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் அல்லது நாட்டின் எதோ ஒரு பகுதியில் பிரச்சினையை மாத்திரம் தீர்க்க கூடியவராக இல்லாமல் இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து சமூகத்தினுடைய பிரச்சினைகளையும் தீர்க்க கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரையில் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் பல்வேறு விடயங்களை கருத்திற் கொண்டே தீர்மானங்களை நிறைவேற்றும். எனவே அடுத்த தேர்தல் மலையக மக்களை பொறுத்த வரை மிக முக்கியமான தேர்தல். அந்த தேர்தலில் மக்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ள நிலையில் 50 ரூபாய் விடயத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நடந்துக்கொள்ளும் முறை எங்களுக்கு அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த விடயத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்” வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.