இது குறித்த விவரம் வருமாறு; கர்நாடகா மாநிலத்தின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலப்பா. விவசாயியான இவர் தனது நிலத்தில் தக்காளி, மிளகாய் போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது அந்த செடிகளுக்கு, நிலத்தை உழுது உரமிடவேண்டும்.
வழக்கமாக அவர், நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது ஏராளமானோர் நீலப்பாவைப் போன்றே சாகுபடி செய்துள்ளதால், நிலத்தை உழுவதற்குத் தேவையான மாடுகள் குறைவாக உள்ளத்துடன் மாடுகளுக்கான வாடகையும் அதிகமாக உள்ளது
இதனால் வேதனையடைந்த அவர், தனது மகனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து, மோட்டர் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழ முடிவெடுத்தனர். தொடர்ந்து, மகனுடைய மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் ஏர் கலப்பை பூட்டப்பட்டது. பின்னர், மோட்டர் சைக்கிளை நீலப்பாவின் மகன் மெதுவாக ஓட்ட, நீலப்பா நிலத்தை உழுதார். இதைப்பார்த்த அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இது குறித்து நீலப்பா கூறியதாவது; “ஒட்டுமொத்தமாக அனைத்து விவசாயிகளும் சாகுபடியில் ஈடுபட்டுள்ளதால், நிலத்தை உழுவதற்கு மாடுகள் கிடைக்காமல் திண்டாடினேன். ஒரு சில இடங்களில், ஆயிரக்கணக்கில் வாடகை கேட்டனர். எனவே, ‘மாடுகளுக்கு பதில் மோட்டர் சைக்கிளில் ஏர் பூட்டி உழுதால் என்ன’ என்று சிந்தித்தேன். இதையடுத்து, எனது மகன் உதவியுடன் அதை செய்து பார்த்தேன். அது, குறைந்த செலவில் எளிமையாக முடிந்துவிட்டது” என்று கூறினார்.