வரும் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவை வழங்கினால் நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வவுனியா பாவற்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கலைமகள் நகர் வீட்டுத் திட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், “2025ஆம் ஆண்டு வரும் போது யாவருக்கும் நிலம் மற்றும் அனைவருக்கும் வீடுகளையும் வழங்க எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் இருபதாயிரம் வீட்டுத் திட்டங்களைக் கட்டிமுடிக்க எதிர்பார்க்கின்றோம்.
நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வேண்டும். பொருளாதார அபிவிருத்தி பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதனை அனுபவித்திருக்கவில்லை. எனவே இதனை கருத்திற்கொண்டு ஏற்றுமதியூடான பொருளாதாரத்தை நோக்கி நாங்கள் நகரவேண்டும்.
நவம்பர் மாதத்திலே நீங்கள் எனக்கு ஆதரவு தந்தால், ஏற்றுமதித் துறையிலே ஒரு சிறந்த பொருளாதார அபிவிருத்தியை நிச்சயமாக நான் ஏற்படுத்துவேன்.
குறிப்பாக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பாரியளவிலான கைத்தொழில் பேட்டைகளை நாங்கள் உருவாக்கவேண்டும். அப்பகுதிகளில் உள்ள தொழிலற்ற இளைஞர்களுக்கு தொழில்களை நாம் வழங்கமுடியும்.
நாம் திட்டமிட்டபடி அனைத்தையும் மேற்கொள்ளும் போது டொலர்களில் வருமானத்தைப் பெறக்கூடிய சந்ததியை உருவாக்க முடியும். எனது நோக்கமும் அதுவாகவே காணப்படுகின்றது” என்று தெரிவித்தார்.