சலசலப்பை ஏற்படுத்தி தொடர் கொலைச் சம்பவங்களின் சந்தேகநபர்களில் ஒருவரான பிரேயரின் (Bryer) தந்தை, தனது மகன் இறப்பதற்கு முன்பாக பதிவிட்ட காணொளியை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஆணொருவர், அவரது அமெரிக்கக் காதலி மற்றும் கனேடிய பேராசிரியர் ஒருவர் என மூன்று பேரை கொலை செய்ததாக இரண்டு இளைஞர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது.
இந்தநிலையில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களாகிய Bryer Schmegelsky மற்றும் Kam McLeod ஆகிய இருவரின் சடலங்கள் கனடாவில் நெல்சன் ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டன.
அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடற்கூற்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த கைத்தொலைபேசியில் அவர்கள் இருவரும் பேசிய காணொளி ஒன்று உள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் உயிரிழந்த இருவரும் தங்கள் கடைசி ஆசை உட்பட சில விடயங்களை பதிவு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் பிரேயர் குறித்த தகவல்கள், அவரது தாயாரிடம் அளிக்கப்பட்டுவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் தற்போது பிரேயரின் தந்தை தனது மகன் உயிரிழப்பதற்கு முன் பதிவு செய்த காணொளி தனக்கு வேண்டும் என கோரியுள்ளார்.
அதிலுள்ள தகவல்கள் சில வாரங்களில் வெளியிடப்படும் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் அந்த காணொளியை கைப்பற்றும் முயற்சியில் பிரேயரின் தந்தையான அலன் கெமெகெல்ஸ்கியின் (Alan Schmegelsky) வழக்கறிஞர் ஈடுபட்டுள்ளார்.
ஷாரா லீமொன் (Sarah Leamon) என்ற குறித்த வழக்கறிஞர், கனேடிய பொலிஸாருடமிருந்து குறித்த காணொளியை பணம் கொடுத்து வாங்குவதற்காக தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.