அத்துடன், ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் ஊடக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூத்த பத்திரிகையாளர் கலாபூஷணம் மறைந்த க.ப. சிவத்தின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “சம உரிமையை இல்லாமலாக்குவதிலேயே இன்று அதிகார வர்க்கத்தின் காலம் சென்றுகொண்டிருக்கின்றது.
இதனால்தான் தேவையில்லாத பிரச்சினைகள் மற்றும் கலவரங்களில் நாங்கள் மாட்டிக்கொள்கின்றோம். அத்துடன் அனைத்து ஆயுதப் போராட்டங்களுக்கும் அடிப்படைக்காரணமாக இருந்திருப்பதும் அந்த இடங்களில் அதிகார வர்க்கமானது மற்றவர்களின் சம உரிமையை இல்லாமலாக்க முற்படுவதிலாகும்.
அத்துடன் ஊடக தர்மமானது தற்போது சற்றேனும் பின்பற்றப்படுவதாக இல்லை. சாதாரண விடயங்களையும் ஊதிப்பெருக்கும் விடயத்தை ஊடகங்களே மேற்கொண்டு வருகின்றன.
அச்சு ஊடகங்கள் எப்படி இருந்தபோதும் இலத்திரனியல் ஊடகங்கள் சமூகத்துக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விடயங்களையே ஒளிபரப்பிவருகின்றன. அனைத்து விடயங்களையும் அரசியலாக்கும் நிலையே தற்போது இருந்து வருகின்றது” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.