கோரிக்கையாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக 26.8 மில்லியன் கனேடிய டொலரை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவி சேவையில் மாகாண ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுசெய்யும் முகமாக குறித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாகாணமான ஒன்ராறியோவின் முதலமைச்சர் டக் போர்ட், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நிதியொதுக்கீட்டுக்கு மத்திய அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்து அவர்களுக்கான நிதியை குறைத்திருந்தார்.
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் நிலைமையை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒன்றாறியோ மாநிலத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அந்த மாநிலத்துக்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கு முன் எதையும் குறிப்பிட்டிராத நிலையில் அவரால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அறிவிப்பு, நிலைமையை மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“நாங்கள் ஒன்றாறியோவிலுள்ள மக்களின் சார்பாக இருக்கின்றோம். அந்த வகையில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தமக்குத் தேவையான சட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறோம்” என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.