அத்துடன், இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்த போதிலும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பாக திருப்தியடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இலங்கையின் தொழிநுட்ப புரட்சி “ஷில்பசேனா” கண்காட்சியின் நிறைவு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை சமூகமயப்படுத்தும் நோக்கில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 18 ஆம் திகதி இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட 12 தலைப்புக்களின் கீழ் 4 நாட்களாக இடம்பெற்ற இக்கண்காட்சியில் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் புதிய படைப்பாளிகளின் புதிய படைப்புகள் உள்ளடங்கிய உற்பத்தி கூடமொன்றும் பாடசாலை மாணவ, மாணவிகளின் அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், கல்வியமைச்சின் பங்களிப்பால் நடத்தப்படும் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்கத் துறைகளுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வகையில் இக்கண்காட்சி இடம்பெற்றது.
மேலும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள், தொழில் முயற்சியாளர்களுக்கான வாய்ப்புகள், தொழிற்சந்தை, விற்பனைக்கான பல்வேறு பொருட்கள் ஆகியன அடங்கிய வர்த்தககூடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், நடமாடும் சேவைகள் போன்றவையும் இக்கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியின் நிறைவு வைபவத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்த போதிலும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பாக திருப்தியடைய முடியவில்லை.
நாட்டை முன்னேற்றுவதற்கு விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறைகளை வலுவூட்டுவதுடன் அவற்றுக்குத் தேவையான வசதிகளை குறைவின்றியும் வழங்க வேண்டும்.
மேலும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாடவிதானங்களை உருவாக்க வேண்டியது கல்வியியலாளர்களின் பொறுப்பாகும். இவ்வாறு வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வளித்து அபிமானமிக்க தொழிற்துறையினர்களாக நாட்டின் இளைஞர், யுவதிகளை மாற்றி இதனூடாக சர்வதேச தொழிற்சந்தையை வெற்றிகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.