ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையகத்தை தமிழக அரசு நியமித்தது.
குறித்த ஆணையகம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள், அப்பல்லோ வைத்தியர்கள், அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரித்தது.
ஆனால் ஆறுமுகசாமி ஆணையகம் விசாரணைக்கு தடைகோரி அப்பல்லோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவிற்கு தமிழக அரசு பதில் வழங்க வேண்டுமெனவும் அதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையகத்துக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதன்போது பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையகத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரம் நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையிலேயே ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ வைத்தியசாலை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறதென கூறி ஆறுமுகசாமி ஆணையகம் பதில் மனுவொன்றை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது.
குறித்த வழக்கில் ஆணையகம் சரியான முறையில்தான் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது” என கூறப்பட்டுள்ளது.