ஏப்ரல்-21 தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கைதானவர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது வரை எத்தனை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறித்து உடனடியாக தமக்கு அறிக்கை தருமாறு அவர் கோரியுள்ளார்.
குறித்த தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டு அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவோர் தொடர்பான விசாரணையின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததோடு, 500இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
இந்தக் குண்டு வெடிப்புக்களையடுத்து, இதனுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் நூற்றுக் கணக்கானோர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.