மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள் என பலர் இராஜிநாமா செய்துவந்தனர்.
இந்த நிலையில், அஸாமில் போட்டியிட்டு மாநிலங்களவைக்குத் தேர்வான சஞ்சய் சின், கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணையப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து சஞ்சய் சின் தெரிவிக்கையில், “துரதிருஷ்டவசமாக, காங்கிரஸ் கட்சி இன்னும் கடந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் குறித்து எந்த பார்வையும் இல்லாமல் இருக்கிறது.
இன்றைய இந்தியாவில், ‘அனைவரது ஆதரவு, அனைவரது நம்பிக்கை’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வழிநடத்தி வருகிறார்.
அவர் சொல்வதை செய்து வருகிறார். அதனால்தான் ஒட்டுமொத்த நாடே அவருடன் உள்ளது. அதனால்தான் நானும் அவருடன் இணைகிறேன். நான் நாளை பா.ஜ.க.வில் இணைகிறேன்.
நான் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளேன். மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துவிட்டேன்” என்றார்.
சஞ்சய் சின், 1998-இல் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் 1999-இல் அவரால் மீண்டும் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.