
குறைபாடுகள் தொடர்பாக நேரடியாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அங்கு விஜயம் செய்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் அழைப்பின் பேரில் இன்று (சனிக்கிழமை) வைத்தியசாலைக்குச் சென்ற அவர், அபிவிருத்திக் குழு நிர்வாகத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி செந்தூர்பதிராஜா, பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, மன்னார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டிபன் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதிகளும் இணைந்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலில், மன்னார், பொது வைத்தியசாலையின் குறைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
குறிப்பாக வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் பகுதி, குடி நீர் பிரிவு, மின்சாரப் பகுதி, நோயாளர் விடுதி உள்ளிட்ட இடங்களை நேரடியாகப் பார்வையிட்ட அவர், குறை நிறைகளைக் கேட்டறிந்தார்.
இதையடுத்து, இங்குள்ள குறைபாடுகளை பிரதமர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சரிடம் பேசி அதனை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார்.
ஏனைய மாவட்டத்துடன் ஒப்பிடும்போது, மன்னார் பொது வைத்தியசாலை மிகவும் பின்தங்கிக் காணப்படுவதாகவும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பல குறைபாடுகள் காணப்படுவதாகவும், இதனைக் கருத்திற்கொண்டு மிக அவசரமாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் உறுதியளித்துள்ளார்.
