நாளை மறுதினம் ஓகஸ்ட் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் அதனைத் தடுக்கும் வகையில் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த இந்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கக் கோரியிருந்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூர்ய, நீதிபதிகள் எல்.டி.பி. தெல்தெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு சிறப்பு அனுமதி மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூர்ய சட்ட மா அதிபராக இருந்த போது இந்த ஆள்கொணர்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றதால், இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து அவர் விலகினார். அதனால் ஏனைய நீதியரசர்கள் இருவரும் மனுவை விசாரித்தனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை இடைநிறுத்தி வைக்கும் வகையில் கட்டளையிடுமாறு சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான மூத்த மேலதிக மன்றாடியார் அதிபதி சண்ஜெய் ராஜரட்ணம் உயர் நீதிமன்றில் இன்று சமர்ப்பணம் செய்தார்.
எனினும் மேல் நீதிமன்றின் கட்டளையை இடைநிறுத்தும் கட்டளையை வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்களான பாதிக்கப்பட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.
அத்தோடு மனு மீதான விசாரணை செப்டெம்பர் முதலாம் திகதிவரை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.