பிள்ளையார் ஆலயத்தை இடித்து பெளத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டித்து யாழில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்து சமய தலைவர் மீது தேனீர் ஊற்றப்பட்டதைக் கண்டித்து நல்லூர், கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் பல இந்து சமய அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாவில் பொலிஸ் பாதுகாப்பில் சென்ற தென்கைலாய ஆதீனம் மற்றும் பிள்ளையார் ஆலய உரிமையாளர் ஆகியோர் மீது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலரால் அநாகரிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து கடும் எதிர்ப்புக்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.