அதன்மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தமிழ் மக்களின் அடையாளங்களையும் புராதனச் சின்னங்களையும் அழிப்பது மாத்திரமல்லாமல் அவற்றின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துவரும் மில்லியன் கணக்கான அன்னியச் செலாவணி வருமானத்தை இழப்பதற்கும் இது வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு, “இலங்கை பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை இலங்கை வாழ் சகல மக்களும் அறிவர்.
சிங்கள மக்கள் தமது வரலாற்று ஆவணமாகப் பின்பற்றும் மகாவம்சம் கூட சிங்கள மக்களின் வரலாறு விஜயனின் வருகையையொட்டியே ஆரம்பிப்பதாகக் கூறுகிறது. ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் விஜயன் இலங்கைக்கு வருகை தந்தபோது இலங்கையில் வளர்ச்சியடைந்த ஒரு நாகரிகம் இருந்ததாகவும் ஐந்து ஈஸ்வரங்கள் இருந்ததாகவும் இயக்கர், நாகர்கள் என்ற இனக்குழுக்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான இனக் குழுமங்கள் சிவனை வழிபட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமல்லாமல், இலங்காபுரி என்பது இராவணனின் நாடு என்பதும் அவன் தனது தாயாரின் இறுதிக்கிரியைகளைச் செய்வதற்காக திருகோணமலை கன்னியாவில் தனது வாள்மூலம் ஏழு வெந்நீர் கிணறுகளைத் தோண்டியதாகவும் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப் பழமைவாய்ந்த ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய முன்றலில் இராவணன் வெட்டு என்னும் பகுதி இன்றளவும் உயிர்த்திருக்கிறது.
சிவபக்தனான இராவணனால் இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள வடக்கே நகுலேஸ்வரமும், கிழக்கே திருக்கோணேஸ்வரமும், மேற்கே திருக்கேதீஸ்வரமும் முன்னேஸ்வரமும் தெற்கே தொண்டீஸ்வரமும் அமைக்கப்பட்டது என்பது வரலாறு. இதில் தொண்டீஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்கு ஈஸ்வரங்களும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இன்னமும் நிலைத்திருக்கின்றன.
இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இராமயணத்தின் காலம் என்பது சற்றேறக்குறைய பத்தாயிரம் வருடங்கள் என்று தமது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். ஆகவே இலங்கையில் இராவணனுடைய வரலாறு என்பதும் அதே காலக்கட்டத்திற்குரியது என்பதையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இதனடிப்படையில்தான் கோணேஸ்வரர் கோயிலுக்கும், கன்னியா வெந்நீரூற்றுக்கும், நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய போன்ற பிரதேசங்களுக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சென்று தரிசித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களைப் போற்றி சைவக்குரவர்களும் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பாசுரங்கள் பாடியுள்ளனர்.
ஆகவே இந்த நாட்டில் சிங்கள மக்கள், தமிழ் மக்களுக்கான நூற்றுக்கணக்கான புராதனச் சின்னங்களும், தொல்லியல் அடையாளங்களும் இருக்கின்றன. அவ்வாறு இருப்பதன் காரணமாகத்தான் இலங்கைக்கு பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். அதுவே இலங்கை அரசாங்கத்திற்கு பல மில்லியன் டொலர் அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்றது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குள் புதைந்து போயிருக்கக்கூடிய இலங்கை அரசியல் இந்த புராதன பாரம்பரியச் சின்னங்களை அழித்தொழித்து அதன் மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதென்பது தமிழ் மக்களின் அடையாளங்களையும் புராதனச் சின்னங்களையும் அழிப்பது மாத்திரமல்லாமல் அவற்றின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துவந்த மில்லியன் கணக்கான அன்னியச் செலாவணி வருமானத்தை இழப்பதற்கும் இது வழிகோலும்.
முல்லைத்தீவில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் புனருத்தாரணம் செய்வதற்கு அனுமதிக்காமல் அங்கு ஒரு பௌத்த விகாரையைக் கட்ட எத்தனிப்பதும், வவுனியாவில் வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சிவன்கோயிலை புனருத்தாரணம் செய்து மக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்காமல் விகாரை கட்ட முயற்சிப்பதும், இராவணனால் உருவாக்கப்பட்ட கன்னியா வெந்நீரூற்றை பௌத்த பிக்குகள் கைப்பற்றி அங்குள்ள சைவ அடையாளங்களை அகற்றி பௌத்த விகாரையைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், அவற்றிற்கு எதிராகப் போராடிய தென்கயிலை ஆதீன முதல்வர்மீதும் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான பெண்மணிமீதும் எச்சில் தேநீர் ஊற்றி அவமதிப்பதும் மிகமிக அநாகரிகமான விடயங்களாகும்.
மன்னார் திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கு முன்னால் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருப்பதும், கோணேஸ்வரத்தில் ஒரு பாரிய புத்தர் சிலையை நிறுவியிருப்பதும், பௌத்தர்கள் வாழாத வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வலிந்து புத்தவிகாரைகளை நிர்மாணிப்பதும் இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்க நாடு என்பதை நிறுவுவதற்கான முயற்சியாகும்.
பல்லாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தமிழ் பூர்வீகக் குடிகள் இத்தகைய திணிப்புக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன், இது ஒரு பல்லின, பலகலாசார, பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை நாம் தெளிவுபட கூறுகின்றோம்.
இலங்கையில் இருக்கக்கூடிய புராதன வரலாற்றுச் சின்னங்கள் அவ்வாறே பாதுகாக்கப்படவேண்டும். குறுகிய சிங்கள பௌத்த தேசியவாத நோக்கில் இவற்றை அழித்தொழிப்பதும் சிங்கள பௌத்த சின்னங்களாக மாற்ற முயற்சிப்பதும் இலங்கையின் வரலாற்றையே அழித்தொழிக்கும் செயற்பாடாகும். ஆகவே இலங்கை அரசாங்கம் இதற்கு ஒத்திசைவாக நிதி வழங்கி இவற்றை அழித்தொழிக்காமல் அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும் என்பதுடன், அந்தந்த பிரதேசங்களில் காணப்படும் இத்தகைய சின்னங்களை அந்தந்த பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகள் அவற்றைப் போற்றிப்பாதுகாப்பதற்கான அதிகாரங்களையும் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.