LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, July 15, 2019

மாற்று அணி எனப்படுவது புதிதாகச் சிந்திப்பது

கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புது விதி பத்திரிகை அதன் பதிப்பை நிறுத்தியது. இதற்கும் கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையும் அதன் பதிப்பை நிறுத்தியது. அதேசமயம் அது தொடர்ந்தும் ஒரு மின் இதழாக வெளிவருகிறது. அது நிறுத்தப்பட்ட அதே காலப்பகுதியில் ஒரு புதிய இணைய இதழ் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் தேவராஜா. முன்பு வீரகேசரி வார இதழின் ஆசிரியராக இருந்தவர்.
இப்படியாக இரண்டு பத்திரிகைகள் நிறுத்தப்படுகின்றன. ஒரு புதிய மின் இதழ் ஆரம்பமாகிறது. ஈழத் தமிழர்கள் மிகவும் சிறிய ஒரு மக்கள் கூட்டம. ஆனால் அவர்கள் மத்தியில் அதிகரித்த அளவில் ஊடகங்கள் காணப்படுகின்றன. ஏற்கனவே பல ஊடகங்கள் இருக்கத்தக்கதாக புதிய ஊடகங்கள் வர வேண்டிய தேவை என்ன?


ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் ஊடகங்களை விட வித்தியாசமாக எதையாவது செய்ய விளையும் ஊடகங்கள் புதிதாக வந்தால் அதற்கு ஒரு தேவை இருக்கிறது. அவ்வாறு புதிதாக சிந்திக்காத எந்த ஓர் ஊடகமும் தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்துமா?


இதுவரை வந்த எல்லா ஊடகங்களிலும் கூறப்பட்டிருப்பதை தமிழ் தலைவர்கள் அல்லது அரசியல்வாதிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் வாசித்திருக்கிறார்களா? எதையாவது கற்றிருக்கிறார்களா? அவ்வாறு எதையாவது கற்றிருந்தால் தமிழ் அரசியலானது ஒரு புதிய திசையில் செலுத்தப்பட்டிருக்கும. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. கடந்த பத்தாண்டு காலத்தேக்கத்தை தமிழில் புதிது புதிதாக பெருகிவரும் ஊடகங்களால் உடைக்க முடியவில்லை என்பதை ஊடகவியலாளர்களும் ஆய்வாளர்களும் அரசியல் பத்திஎழுத்தாளர்களும் கருத்துருவாக்கிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இத்தேக்கமானது ஊடகங்களுக்கு மட்டும் அல்ல கட்சிகளுக்கும் கூடப் பொருந்தும. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மற்றொரு புதிய கட்சி தோன்றியது. தமிழ் தேசிய பசுமை இயக்கம் என்ற ஒரு சூழலியல் செயல்பாட்டு இயக்கம் ஒரு கட்சியாக உருமாறியது. அக்கட்சி தனது முதலாவது தேசிய மாநாட்டை வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தியது. மண்டபம் நிறைந்த மக்களை திரட்டி காட்டியது.2009-க்கு பின் தமிழ்ப் பரப்பில் மற்றொரு புதிய கட்சி தோன்றியிருக்கிறது. இக்கட்சி தோன்றிய அடுத்த நாளில் ஒரு செய்தி வெளியாகியது. ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஓஸ்ரேலியாவில் இருந்து வந்த ஓரு புலமையாளர் ஈடுபடுகிறார் என்று. ஆனால் அவருடைய அந்த முயற்சியும் தோல்வி கண்டு விட்டதாக பின்னர் தெரியவந்தது. அதாவது ஒரு மாற்று அணியை கட்டியெழுப்பும் மற்றொரு முயற்சியும் சறுக்கிவிட்டது என்று பொருள்.


இப்பொழுது சில கேள்விகள் எழுகின்றன. திரும்பத் திரும்ப இவ்வாறான முயற்சிகள் ஏன் சறுக்குகின்றன? இதற்கு ஒரு கட்சி மட்டும் தான் காரணமா? அல்லது எல்லா தரப்புகளுமே காரணமா? பொருத்தமான தலைமை மாற்று அணிக்குள் இல்லை என்பதனால் தான் வெளித் தரப்புக்கள் தலையிட்டு ஓர் அணியை கட்டி எழுப்ப வேண்டி இருக்கிறதா? அல்லது ஒரு மாற்று அணி எனப்படுவதை வேறு தளத்தில் சிந்திக்க வேண்டுமா?
இக்கட்டுரையின் தொடக்கத்தில் ஊடகங்கள் தொடர்பில் தெரிவித்த அதே கருத்து அரசியலில் மாற்று அணியை கட்டியெழுப்பும் விடயத்திலும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. முதலில் மாற்று அணி என்றால் என்ன?

ஒரு மாற்று அணி எனப்படுவது ஏற்கனவே இருக்கின்ற ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் தலைமைக்கு எதிரான ஒன்று மட்டுமல்ல. அது அத்தலைமையின் அரசியல் செயல் வழி பிழை என்பதனால் ஒரு புதிய அரசியல் செயல் வழியைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு கட்டியெழுப்பப்படும் ஒன்றுதான். ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட தலைமையின் அரசியல் செயல் வழி பிழை என்று சொன்னால் அதற்கு மாற்றாக ஒரு புதிய வழியை யார் கண்டுபிடிப்பது? இது தொடர்பாக சிந்திக்கும் கருத்துருவாக்கிகள் கண்டுபிடிக்கலாம் அல்லது தம்மை மாற்று தலைவர்களாக கருதும் அரசியல்வாதிகள் கண்டுபிடிக்கலாம் அல்லது அரசியற் செயற்பாட்டாளர் கண்டுபிடிக்கலாம்.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு புதிய செயல் வழி கண்டுபிடிக்கப்படாத வெற்றிடத்திலேயே ஒரு மாற்று அணியை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் திரும்பத் திரும்ப முன்னெடுக்கப்படுகின்றன.அதன் மெய்யான பொருளில் மாற்று எனப்படுவது ஒரு மாற்று அரசியலை முன்வைக்க வேண்டும். ஒரு மாற்று அரசியல் எனப்படுவது இதுவரையிலும் சிந்திக்கப்பட்டதற்கு மாற்றாக ஒரு புது வழியை சிந்திக்க வேண்டும். அல்பேர்ட் ஐன்ஸ்டீன் கூறுவதுபோல எது ஒன்றை திரும்பத் திரும்பச் செய்வதால் முன்னேற்றம் காணப்படவில்லையோ அதை நிறுத்தி வேறு விதமாக சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திப்பது என்றால் அதற்கு சமூக பொருளாதார அரசியல் கலாச்சார தளங்களில் புதிய சிந்தனைகள் எழ வேண்டும்.

மாற்று எனப்படுவது ஒரு பண்பாட்டு வெடிப்பு. அது சிந்தனையிலும் செயலிலும் முற்றிலும் புதிதாக ஒன்றை வெளிக்கொண்டு வர வேண்டும். ஈழத்தமிழர்களின் கடந்த பத்தாண்டு கால அரசியல் ஏன் தேங்கி நிற்கிறது? கடந்த பத்தாண்டுகளாகதான் தேங்கியதா? அல்லது அதற்கு முன்னரே தேங்கியதா? அவ்வாறு 2009க்கு முன்னரே தேங்கியதன் விளைவாகத்தான் நந்திக் கடற்கரையில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டதா? அப்படியென்றால் இதற்குரிய காரணங்களை 2009க்கும் முன்னிருந்தே தேட வேண்டும். அப்படி தேடத் தேவையான விவாதங்களும் அறிவியல் ஆராய்ச்சிகளும் நிகழ வேண்டும்.

இல்லையென்றால் அதாவது தேக்கத்தை விளங்கிக் கொள்ளவில்லை என்றால் அதை உடைத்துக்கொண்டு வெளியில் வர முடியாது. அவ்வாறு தேக்கத்தை உடைக்கும் ஒரு புதிய சிந்தனை வெடிப்பு நிகழாத வெற்றிடத்தில் உருவாகக்கூடிய எந்த ஒரு மாற்று கட்டமைப்பும் தேக்கத்தின் புதிய நீட்சியாகவே அமையும். அதுவும் பிறகு ஒரு நாள் தேங்கி நிற்கும்.
தமிழ் மக்கள் பேரவை தேங்கி நிற்பதற்கு அதுதான் காரணம். பேரவைக்கு ஒரு காலத் தேவை இருந்தது. பேரவை தனக்கென்று ஓர் அரசியல் இலக்கை முன்வைத்தது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு முன்மொழிவையும் கண்டுபிடித்தது. ஆனால் தீர்வு இலக்கை நோக்கி தமிழ் அரசியலை செலுத்த பேரவையால் முடியவில்லை. ஏன் முடியவில்லை?


ஏனென்றால் ஓர் அரசியல் இலக்கை அடைவதற்கு மூன்று வழிகள் இப்போதைக்கு சாத்தியமாக காணப்படுகின்றன. ஒன்று தேர்தல் வழி. மற்றது பொதுசன கிளர்ச்சிகள். மூன்றாவது அழுத்தக் குழுவாக செயற்படுவது. இதில் பேரவை ஓரளவுக்கு அழுத்தக் குழுவாக செயல்பட்டது. ஒரு மாற்று அணிக்குரிய பலவீனமான இடை ஊடாட்டத் தளத்தை பேரவை உருவாக்கியது. அத்தளத்தில் தோன்றியதே விக்னேஸ்வரனின் புதிய கட்சி. ஆனால் அக்கட்சியை தொடர்ந்து வளர்க்க பேரவை தயங்குகிறது. ஏனெனில் அரசியலில் குறிப்பாக தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபட பேரவை தயாரில்லை.
அப்படியென்றால் அந்த அமைப்புக்கு மற்றிரு வழிகள்தான் உண்டு. ஒன்று வெகுசன கிளர்ச்சி அரசியல். பேரவையால் அதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்யும் என்று நம்பத்தக்க விதத்தில் அதன் கடந்த காலம் காணப்படவில்லை. அப்படி செய்யத்தக்க துணிச்சலும் அரசியல் ஒழுக்கமும் அந்த அமைப்பீடம் இல்லை.

எனவே எஞ்சியிருக்கும் ஒரே வழி தான் உண்டு. அழுத்தக் குழுவாக செயற்படுவது. அதைத்தான் அவர்கள் இதுவரையிலும் செய்து வந்தார்கள். இனிமேல் அதை செய்வதென்றால் அந்த அமைப்புக்குள் கட்சிகளையும் வைத்துக்கொண்டு செய்வது கடினமாக இருக்கும். அது மட்டுமல்ல விக்னேஸ்வரனின் புதிய கட்சியோடு பேரவை தேங்கி நின்றுவிட்டது. இனிமேல் அது ஒரு பொதுஜனக் கருத்தை உருவாக்கும் அமைப்பாகவோ அல்லது அரசியல் தலைமைகளின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் ஒரு அமைப்பாகவோ செயல்படுமா என்பது சந்தேகமே. ஆனால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதைப் போல ஒரு புதிய சிந்தனை வெடிப்போடு பேரவை ஒரு புதிய தடத்தை தெரிந்தெடுத்து முன் செல்லுமாக இருந்தால் வாய்ப்புகள் உண்டு.


அவ்வாறு ஒரு புதிய தடத்தை ஒரு புதிய அரசியல் செயல் வழியை கண்டுபிடிக்கவல்ல தலைவர்கள் மேலெழும்போது அத்தலைமையின் வசீகர ஆளுமைக்குள் ஏனைய உப தலைமகள் இயல்பாக ஒன்றிணையும்.அப்படிப்பட்ட ஒரு பேராளுமை அரங்கில் மேலெழும் வரை ஒரு மாற்றத் தலைமைக்கான முயற்சிகள் பெரும்பாலும் தேர்தல் கூட்டுகளை உருவாக்கும் நோக்கிலானவைகளாலாகவே இருக்கும்.

ஆனால் மாற்றுத் அரசியற்தளம் எனப்படுவது ஒரு தேர்தல் கூட்டு மட்டும் அல்ல. அது அதைவிட ஆழமானது. மாற்று அரசியற்தளம் எனப்படுவது சில அரசியல் விமர்சகர்களின் வாராந்தக் கற்பனையல்ல. அல்லது கூட்டமைப்பைப் பிடிக்காதவர்களின் புறுபுறுப்பல்ல. அல்லது அது கஜேந்திரகுமாரின் சொந்த விடயமுமல்ல, விக்னேஸ்வரனின் சொந்த விடயமுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரனின் சொந்த விடயமுமல்ல. அது தமிழ் மக்களுடையது. இப்போதுள்ள அரசியலுக்கும் அடுத்த கட்ட அரசியலுக்கும் இடையிலான இடையூடாட்டத் தளம் அது. தமிழ் மக்களுக்கான நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத் தடம் அது. இருக்கின்ற தலைமுறைக்கும் இனிவரப்போகும் எல்லாத் தலைமுறைகளுக்கும் உரியதொன்று. தமிழ் மக்கள் இதுவரை செய்த தியாகங்கள், பட்ட காயங்கள், சிந்திய ரத்தம் அனைத்தினதும் தொடர்ச்சி அது. தமிழ் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான அத்தியாவசிய முன்நிபந்தனையும் அது. ஒரு மாற்று அரசியற் தளம் இல்லையென்றால் ஜெனீவாவிற்குள் பெட்டி கட்டப்பட்டுக் கிடக்கும் தமிழ் அரசியலை அந்தப் பெட்டிக்கு வெளியே கொண்டு செல்ல முடியாது.

சில தனிநபர்கள் அல்லது கட்சிகளின் நோக்கு நிலையிலிருந்து அதை உடைக்க முடியாது. எனவே ஒரு மாற்று அரசியல் தளத்தைக் குறித்து சிந்திக்கும் எல்லாத் தரப்புக்களும் சம்பந்தப்பட்ட தலைவர்கள், கட்சிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் கருத்துருவாக்கிகள், ஊடகவியலாளர்கள், படைப்பாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்று தாயகத்திலும், டயஸ்பொறாவிலும் உள்ள சக்திமிக்க ஆளுமைகள் அனைத்தும் இந்த உயர்ந்த நோக்கத்திற்காக அழுத்தப் பிரயோக அமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.


இந்த இடத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட சூழலை உதாரணமாகக் காட்டுவோர் உண்டு. அண்மையில் விக்னேஸ்வரனும் அத்தொனிப்படப் பேசியிருக்கிறார். ஆனால் கூட்டமைப்பும் மாற்றும் ஒன்றல்ல. கூட்டமைப்பு உருவாக்கப்படட காலகட்டமும் இப்பொழுதிருப்பதும் ஒன்றல்ல. கூட்டமைப்பு உருவாக்கப்பட போது புலிகள் இயக்கம்தான் அரசியலின் மைய விசை. அந்த மைய விசையயை ஏற்றுக்கொண்ட கட்சிகள் சேர்ந்து கூட்டமைப்பை கட்டியெழுப்பின. பின்னணியில் சிவராம் போன்றவர்கள் உழைத்தார்கள். அப்பொழுது புலிகள் இயக்கம் என்ற தீர்மானிக்கும் சக்தி பின்னாலிருந்ததால் ஒருகூட்டை உருவாக்க முடிந்தது. ஆனால் இப்பொழுது அப்படியொரு பலமான சக்தி இல்லை என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

ஆனால் இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக் காட்ட வேண்டும். கூட்டமைப்பு உருவாக்கப் பட்ட காலகட்டத்தில் புலிகள் இயக்கம் தான் மையம. அந்த மையம்தான் தமிழ் அரசியலின் செயல்வழியைத் தீர்மானித்தது. அந்த மையத்தின் நிழலாக கூட்டமைப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. அதாவது ஒரு மையம் அதன் பதிலியைக் கட்டியெழுப்பப் பின்னணியில் ஆதரவாக நின்றது.


ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியல்ல. இப்பொழுது கூட்டமைப்பே மையம். மாற்று எனப்படுவது அதன் பதிலி அல்ல. அதற்கு எதிரான வேறொன்று. எனவே பலமாக ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஒன்றிற்கு எதிராக ஒரு மாற்றை உருவாக்க வேண்டும். அதற்கொரு புதிய சிந்தனை வேண்டும். இதற்கு முன்பு சிந்திக்கப்பட்டதை விட வேறு விதமாகச் சிந்திக்க வேண்டும். அது ஒரு புதிய சிந்தனை வெடிப்பு. ஒரு புதிய பண்பாடுருவாக்கம். அதை ஒன்றில் மாற்றை உருவாக்க விரும்பும் கட்சிகள், தலைமகள் உருவாக்க வேண்டும். அல்லது அது தொடர்பில் சிந்திக்கும் புத்திஜீவிகள் கருத்துருவாகிகள் அல்லது ஊடகவியலாளர்கள் படைப்பாளிகள் மதத் தலைவர்கள் போன்றோர் அதற்குரிய சூழலைக் கனியச் செய்ய வேண்டும். எதைச் செய்தாலும் ஒரு புதிய அரசியற் செயல் வழியைத் திறக்கத் தயாரற்ற தலைமைகளை வைத்து அதைச் சாதிப்பது கடினம்.


தமிழ் மக்கள் பேரவை அப்படி ஒரு பாத்திரத்தை வகிக்கும் வல்லமையை எப்பொழுதோ இழந்து விட்டது. அதனாற்றான் சில தனிநபர்கள் கூட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள். தமிழ் மக்கள் பேரவைக்கு வெளியே தாயகத்திலும் சரி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் சரி ஒரு பலமான அமைப்பு இல்லை. ஒரு மாற்று அணியைக் கட்டியெழுப்ப தேவையான அழுத்தங்களை சம்பந்தப்பட்ட கட்சிகளின் மீதும் தலைமைகளின் மீதும் பிரயோகிக்க வல்ல அமைப்புக்கள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இந்த வெற்றிடம் உள்ளவரை ஒரு பலமான மாற்றை அதன் மெய்யான பொருளில் கட்டி எழுப்புவது கடினம். சில சமயம் சிங்கள பௌத்த தேசியவாதிகள் மேலும் மூர்க்கமாகச் செயற்பட்டால் அப்பொது எதிரிக்கு எதிராக ஏதும் தேர்தல் கூட்டுகள் ஏற்படலாம்.

BY: NILANTHAN


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7