புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தற்போது தன்மீதான குற்றச்சாட்டை தீபா மறுத்துள்ளார். அத்துடன் தன்னிலை விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.
“சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னை மிரட்டினார், ஆபாச செல்பிக்களை அனுப்பச்சொன்னார், குறுஞ்செய்திகளை மருத்துவக்கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார்” என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.
தீபா சுந்தரலிங்கத்திற்கு தற்போது 37 வயதாகிறது. புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நிபுணராக செயற்பட்டு வருகிறார். 2010 முதல் மருத்துவராக பணியாற்றும் தீபாவிடம் சிகிச்சை பெற கடந்த 2015 ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் சென்றார். அவரை நோயாளி என்பதை விட மருத்துவர் தீபாவின் விதி என்றே கூற வேண்டும்.
விதி வடிவத்தில் வந்த அந்த நோயாளிக்கு புற்றுநோய் தாக்கம் இருந்தது. அன்று முதலே இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர் என்றும் வெளியில் சுற்றியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர் என்றும் புற்று நோய்க்கு தீபா சிகிச்சை அளித்தார் என்றும் கூறப்பட்டது.
2015 ஆம் ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 முறை சிகிச்சை அளித்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் பட்டியலில் இருந்த அந்த நோயாளியின் பெயரை தீபா நீக்கினார். அதன்பின்னர்தான் விதி தீபாவின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.
தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்றும் சிகிச்சைக்கு வந்த போது தன்னுடன் உறவு கொண்டார் என்றும் தீபா மீது அந்த நோயாளி குற்றச்சாட்டை முன் வைத்தார். தன்னை கைவிட்டு விட்டதாகவும் வேறொரு நபரை காதலிப்பதாக கூறிய அவர் தன்னை நோயாளிகள் பட்டியலில் இருந்தே நீக்கிவிட்டதாகவும் கூறினார்.
தீபா மீது சி.பி.எஸ்.ஓ எனப்படும் College of Physicians and Surgeons இல் முறைப்பாடு அளித்த அந்த நோயாளி, “நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஒரு முக்கியமான உறவு இழப்பு என்னை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. தீபா என்னை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் எனக்கு சிகிக்சை அளிக்கவும் மறுத்து விட்டார்” எனவும் தனது தரப்பிலான முறைப்பாட்டை அறிக்கையாக சமர்பித்தார்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது தீபா மீது குற்றம் சுமத்திய நோயாளியின் குரல் மட்டுமே மேலோங்கியிருந்தது. அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த தீபா மௌனமாகவே இருந்தார். பதில் எதுவும் கூறவில்லை.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீபாவின் மருத்துவ உரிமம் ரத்துச் செய்யப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கனடாவில் இவர் மருத்துவராக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் கழித்து மருத்துவர் தீபா தனது தரப்பு நியாயத்தினை முன் வைத்துள்ளார். அதாவது “நடந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும் பாதிக்கப்பட்டவரே நான்தான்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆபாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார் என்றும் முறையிட்டுள்ளார்.
குறித்த நோயாளி தன்னுடன் உறவு கொள்ளாவிட்டால் தான் அனுப்பிய குறுச்செய்திகள், ஔிப்படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாகவும் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும் தீபா கூறியுள்ளார்.
அவமானத்தினால் தான் கூனி குறுகிப்போய் நின்றதால்தான் பேசமுடியவில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தையும் நீதிமன்றம் கேட்கவேண்டும் என்றும் தீபா முறையிட்டுள்ளார்.
இதுநாள்வரை நோயாளி தரப்பிலான குற்றச்சாட்டினை கவனித்த மருத்துவத்துறை, தீபா தரப்பு நியாயத்தையும் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.