யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் இன்று பதிவுகளை மேற்கொண்டனர்.
வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நியமனத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகளே இன்று தமது விபரங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர்.
அந்தவகையில், யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய உள்ளவாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ.பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் இன்று பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கேட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரச நியமனத்தில் 2017ஆம் ஆண்டு 6ஆம் மாதத்திற்குப் பின்னரான உள்வாரிப் பட்டதாரிகள், எச்.என்.டீ.ஏ. பட்டதாரிகள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் பலருக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
அரசின் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது பதிவுகளை மீளவும் மேற்கொண்ட பட்டதாரிகள் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடாத்தியிருத்தனர்.
இதன்போது பட்டதாரிகளிடத்தே பாரபட்சம் காட்டாமல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கேட்டுள்ளனர்.