எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக இன்று (சனிக்கிழமை) மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. தி.மு.க.வின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத தி.மு.க. இப்போது என்ன வாக்குறுதி வழங்கும் என்று தெரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றியை பெற்றனர் தி.மு.க.வினர்.
இன்னும் 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை இலட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கப்படும். அரசின் திட்டங்கள் என்வென்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்.
இந்நிலையில், தமிழகத்தில் மிகவும் உயர்தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடாகவே இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.