தபால் துறை போட்டித்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து தி.மு.க.உறுப்பினர் தங்கம் தென்னரசு, சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானமொன்றினை பேரவையில் இன்று (திங்கட்கிழமை) கொண்டு வந்து உரை நிகழ்த்தினார்.
தமிழர்கள் மத்திய அரச பணிகளில் இணைந்துவிடக் கூடாதென திட்டமிட்டு, மத்திய அரசு செயற்படுவதாக தங்கம் தென்னரசு குற்றம் சுமத்தினார்.
அத்துடன் தபால் துறை போட்டித்தேர்வில் தமிழ் மொழியை மீண்டும் சேர்க்க மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக சட்டப்பேரவையில் இவ்விடயம் குறித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “தபால் துறை தேர்வில், வினாத்தாள் ஒன்றில் மாத்திரமே தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் இரண்டில் எந்ததொரு பிரச்சினையும் இல்லை.
மேலும் இரு மொழி கொள்கையை பின்பற்றும் தமிழக அரசு இவ்விடயம் குறித்து மத்திய அரசை நிச்சயம் வலியுறுத்தும்” என அவர் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், “இரு மொழி கொள்கையில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றுமா” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் சேர்ந்தே குரல் எழுப்புவோம், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம் என பதிலளித்தார்.
பின்னர் பேசிய துரைமுருகன், “நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் குரல் எழுப்புவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும் தமிழக அரசு மத்திய அரசை கண்டித்து ஏன் தீர்மானம் நிறைவேற்ற கூடாது” என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதன்போது குறுக்கிட்டு பேசிய துணை முதலமைச்சர், “இந்த விவகாரம் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள்” என்றார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி, “தி.மு.க இந்த விவகாரத்தில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே பேசி வருகின்றது.
மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன், “தாங்கள் உணர்வோடு இந்த விவகாரம் குறித்து பேசுகின்றோம். ஆனால் தி.மு.க.வை இழிவுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பேசியமையால் அதனை கண்டித்து வெளிநடப்பு செய்கின்றோம்” எனக் கூறினார்.
அதனை தொடர்ந்தே தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.