விசாரணை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை அடுத்த ஒரு மாதத்துக்குள் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “புலனாய்வு அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றால் அது தொடர்பாக பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
தொடர்ந்தும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர், ஜனாதிபதி மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சின் முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவர்களின் சாட்சிகள் மிகவும் பெறுமதியானவை.
சாட்சியமளித்த பின்னர் மீண்டும் தெரிவுக்குழுவுக்கு சிலர் அழைக்கப்படுவார்கள். எவ்வாறாயினும் மக்களுக்கு உண்மையினை அறிந்துக்கொள்ளும் அவசியம் உள்ளது.
மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பாக வெளிப்படுத்த முடியும்” என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.