
உரிமைப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் எவரேனும் பத்து வருடங்களுக்கு மேல் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அந்த இடம் அவர்களுக்கே சொந்தமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய மக்களுக்கு இன்று (சனிக்கிழமை) காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் பல ஆண்டுகளாக காணி உறுதி பத்திரம் இல்லாமல் இருந்த சுமார் 1200 பேருக்கு ‘ரன் பீம’ எனும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் இடம்பெற்றது.
இதில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் லக்கி ஜெயவர்தன, நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும்போது, “சமூகத்தில் சிறியவருக்கும் உரிமையை வழங்கும் வேலைத் திட்டத்தின் ஊடாகவே இதனை முன்னெடுத்துள்ளோம்.
ஒருபுறத்தில் எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதனூடாக சிறு வியாபாரங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறான வர்த்தக பொருளாதார முறைமையை உருவாக்கிய பெருமை ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும்.
குறிப்பாக ஜெ.ஆர்.ஜெயவர்தனவின் எண்ணக்கருவிற்கமையவே இதனை முன்னெடுத்துள்ளோம். அடுத்ததாக காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவதே எமது நோக்கம்.
இன்று அரசாங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் எவரேனும் பத்து வருடங்களுக்கு மேல் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அந்த இடம் அவர்களுக்கே சொந்தமாக்கப்படும். இதற்கான உறுதிப் பத்திரமும் வழங்கப்படும். இதனூடாக ஒவ்வொருவருக்கும் சொந்த இடம் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு 20 பேர்ச் காணியாக இருந்தாலும் அதற்கான உறுதிப்பத்திரத்தை நாம் வழங்குவோம். முன்னர் முதலாளி வர்க்கத்தினருக்கு உரிமைகள் இருந்தன. ஆனால் சாதாரண மக்களுக்கு அந்த சந்தர்ப்பம் இருக்கவில்லை. இந்த முறைமையை மாற்றவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. இந்த உறுதிப்பத்திரங்கள் வழங்கிய பின்னர் அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என் அவர் தெரிவித்தார்.
