உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டமையால் இன்று மாலை 2 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
கர்நாடக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடியுள்ள நிலையில், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை இராஜினாமாவிற்கான காரணத்தை கூறவேண்டும் என்றும் சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக குமாரசாமி இரண்டு நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார். இதன்காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் 2 வாரங்களாக உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகியது.
குறித்த கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என குமாரசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த 18ஆம் திகதி முதலமைச்சர் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
குறித்த தீர்மானத்தின் மீதான விவாதம் 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து சட்டசபை இன்று கூடிய நிலையில் நண்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றால் பா.ஜனதா தளம் ஆட்சியமைக்க வழியமைத்து தரவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.