அரசியலமைப்பினை தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் சுய தேவைகளுக்காக அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு செயற்படுவதும் முரணானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் பதவிக்காலம் எத்தனை வருடங்கள் என்ற சந்தேகம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது. ஆறு வருடங்களாக ஜனாதிபதியின் பதவிக் காலம் 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஐந்து வருடமாக குறைக்கப்பட்டமையினை சுதந்திர கட்சியினர் நன்கு அறிவார்கள்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது அதில் எவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது அறியாமல் எவரும் ஆதரவு வழங்கவில்லை.
எந்நிலையிலும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் நீடித்துக்கொள்ள முடியாது. பதவியில் மேலதிகமாக இன்னும் குறுகிய காலம் இருக்கலாம் என்ற நோக்கத்திலே பதவிக்காலம் குறித்து தொடர்ந்து சந்தேகம் எழுப்படுகின்றது. ஆனால் அரசியல் தேவைகளுக்காக அரசியலமைப்பினை தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்தார்