அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மனோ கணேசன் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன் உறுதியளித்தார் குறித்த உறுதிமொழியை அடுத்து அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த விடயத்தில் இருக்கும் சட்ட நிலைப்பாடு தொடர்பாக எமது ஆதவன் செய்திச்சேவை சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு சில அரசியல் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே இருக்கின்றது.
இதேவேளை வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதெனில் அரசியல் ரீதியான தீர்மானத்தை எடுத்து அதிலும் நிர்வாகத்துறை, நீதித்துறை, நிறைவேற்றுத் துறையின் பங்களிப்பு இதில் மிக அவசியமானது. இதில் ஒரு துறையின் முடிவினால் மட்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமுடியாது.
குறிப்பாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் மூலம் அரசியல் தீர்மானத்தை எடுத்து அதன் பின்னர் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கள் மீள பெற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அவர்கள் விடுதலை செய்யப்பட முடியும்.
இதேவேளை வழக்கு தாக்கல் செய்யப்படாதவ அரசியல் கைதிகளை குற்றப்புலனாய்வு பிரிவு அல்லது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஊடாக மீளப் பெறமுடியும்.
எனவே அமைச்சரவை தீர்மானத்தினால் மட்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்பதே சட்டரீதியான நிலைப்பாடாக இருக்கின்றது” என சட்டத்தரணி கே.வி.தவராசா கூறினார்.