அத்துடன், அவர்களின் முயற்சி இப்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முகங்கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
திருகோணமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லோங்லி பிளனெற் (Lonley Planet) எனும் நிறுவனம் உலகிலேயே சுற்றுலாப் பயணத்திற்கான சிறந்த நாடு இலங்கை எனத் தெரிவுசெய்தது.
இந்நிலையில், ஈஸ்டர் தின குண்டு வெடிப்புக்களுக்குப் பின்னர் எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் ஜூன் மாதம் மீண்டும் அந்த நிறுவனம் இலங்கையே முதலாம் இடத்தில் உள்ளதாக கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மற்றுமொரு நிறுவனமும் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கையைத் தெரிவு செய்துள்ளது. இவ்வாறு, குண்டு வெடிப்புக்குப் பின்னரான நிலைமையை நாங்கள் இன்று சரி செய்திருக்கின்றோம்.
இந்த நாட்டை கீழே தள்ளிவிட இடங்கொடுக்கக்கூடாது. நான் முன்னோக்கிக் கொண்டு செல்வேன். நாட்டின் மீளக்கட்டியெழுப்ப அமைச்சர்களும் கடுமையாக உழைத்தார்கள். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்தார்கள்.
பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சித்தார்கள். நாடு முழுவதிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கின்றார்கள் என்று கூறினார்கள்.
ஆனால், குண்டு வெடிப்பிற்குப் பின்னர், அதனுடன் சம்மந்தப்பட்ட அனைவரையும் இரண்டு மாதங்களில் கைது செய்தோம்.
இதனிடையே, நாட்டின் பல இடங்களிலும் குண்டுகள் இருக்கின்றது என மக்களிடம் பீதியை ஏற்படுத்தினார்கள். பாடசாலை செல்பவர்களைப் பயமுறுத்தினார்கள்.
இவை அனைத்தையும் செய்துபார்த்தவர்கள், இப்போது இனவாதத்தை தூண்டி விடுவதற்கான வேலையைக் கையில் எடுத்துள்ளார்கள். அதற்கும் மக்கள் இடங்கொடுக்கவில்லை. தற்போது அவர்களது திட்டம் தரைமட்டமாகியுள்ளது.
நாங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க தயாராகவே உள்ளோம். நாட்டை மேலே கொண்டு வருவோம். எங்கள் அமைச்சர்கள் அதற்குத் தயாராக உள்ளனர்.
2015 ஆம் ஆண்டு ஆட்சியைப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். ஒரு பிரச்சினையைத் தீர்க்கும் போதும் மற்றொரு பிரச்சினை வந்தது. குண்டு வெடிப்பிற்குப் பின்னர் மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தினோம். பொருளாதாரத்தை கட்டியெழுப்பினோம்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் நாங்கள் முதலாவதாக வந்திருக்கிறோம். நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு நாங்கள் பின்னிற்க மாட்டோம்” என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.