மகாராஷ்டிராவில் இன்றும் அதி தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
கடும் மழை பெய்யும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, மும்பை மக்களை மாநகராட்சி சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இப்போது பெய்துவரும் பலத்த மழையால் மும்பையின் தாழ்வான பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. அத்துடன் அங்கு ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
முதானே மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கு ஒரே நாளில் 23.6 செ.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கல்யானில் 23.1 செ.மீற்றரும், அபேர்நாத்தில் 22 செ.மீற்றர் மழையும் பதிவாகி இருந்தது. மும்பையில் வரலாறு காணாத அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு மழை பெய்தது. அதை நெருங்கும் வகையில் தற்போது மழை பெய்து வருகிறது.
இதேவேளை, தானேவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 132 பேரை இந்திய விமானப் படையினர் மீட்டுள்ளதோடு, தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.