மேலும், இப்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று 10 அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டன. இந்த நிகழ்வு கொழும்பு, விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில், அரசமைப்பை மாற்றுவதற்கான அதிகாரங்கள் அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்று கேள்வி எழுந்துள்ளது.
100 நாட்கள் அரசாங்கத்தில் 19ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தபோதும், 20 ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தக்கட்டமாகக் கொண்டுவருவோம் என்று கூறிய காரணத்தினாலேயே நாம் அன்று அதற்கு ஆதரவளித்தோம். ஆனால், இன்று எமக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இந்த நாட்டை பிளவுப்படுத்தவே முற்பட்டார்கள். 9 பிரிவுகளாகப் பிரித்து, தனித்தனியாக பொலிஸ் அதிகாரங்களை வழங்கவே முற்பட்டார்கள். இதனை நாம் விமர்சிக்கும்போது, 13+ வழங்குவதாக நான் கடந்த காலங்களில் கூறியதைத் தெரிவித்து வருகிறார்கள்.
நான் இதனை இன்றும் மறுக்கவில்லை. 13+ இனால் நாடு 9 பிரிவுகளாக பிளவடையாது. தனி இராஜ்ஜியங்கள் ஏற்படாது. பிரதேச சபைகளுக்கு அதிகாரங்களைக் கூட்டுவதும், நாடாளுமன்றில் இரண்டாவதாக மத்திரி சபையொன்றை அறிமுகப்படுத்துவதும் தான் 13 அதில் அடங்கியிருந்தன.
ஆனால், இந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அரசமைப்புக்கான சட்டவரைபில், தனி இராஜ்ஜியம் என்ற பெயர் மட்டும்தான் இல்லை.
எமது காலத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் முறையாக இடம்பெற்றன. 2013ஆம் ஆண்டு ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வடக்கிலும் தேர்தல் நடத்தினோம். ஆனால், இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து வாக்குரிமையை மக்களிடமிருந்து பறித்துள்ளது.இதனால், விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழர்களுக்கு விடியல் கிடைத்தப் பிறகு அபிவிருத்திகளை செய்துக்கொள்வோம் என்ற நோக்கில்தான் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். எனினும், இன்று இரண்டும் இவர்களுக்கு இல்லாது போயுள்ளது.
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதுதான் தமிழர்களுக்கான விடுதலை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக எமது அரசாங்கத்தின் காலத்தில் கூட்டமைப்பை பேச்சு நடத்த அழைத்தோம். ஆனால், கூட்டமைப்பினர் அதனை புறக்கணித்தார்கள்.
இனியும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லை. எனவே, மக்களின் வாக்குகளுடன் புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாகும். அந்த புதிய அரசாங்கத்தில் நாம் புதிய அரசமைப்பைக் கொண்டுவருவோம். இதற்காக நாம் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வோம். மக்களை ஏமாற்றாமல் சர்வஜன வாக்கெடுப்பிலேயே நாம் இதனைக் கொண்டுவருவோம் என்பதை நான் கூறிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.