இரத்தினபுரியில் இன்று (திங்கட்கிழமை) ‘அழகிய சப்ரகமுவ’ நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் கித்துள் தொடர்பான சட்ட வரைவை வெளியிடுதல் ஆகியவற்றை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, சப்ரகமுவ மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் ‘எமது வீடு அழகானது’ என்ற திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு, வீட்டு நிர்மாணப் பணிகளுக்கான அனுசரணை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கான ஆவணங்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கித்துள் சார்ந்த உற்பத்திகள் உள்ளடங்கிய கண்காட்சியையும் ஜனாதிபதி, பார்வையிட்டார்.
இதன்போதே, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான தனது வேலைத்திட்டத்தில் மக்கள் தமக்கு ஆதரவினை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்கால தலைமுறையினருக்காக சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே தான் அனைத்து தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி இங்குக் குறிப்பிட்டார்.
மேலும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் இந்த நிகழ்வின்போது கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.