யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் பியூல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிப்பேராணை மனுவில் பிரதிவாதிகளான மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாவார் என்று மன்றுக்கு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டது.
அத்துடன், நான்காவது பிரதிவாதியான இடொக்கோ (Edotco Services Lanka (pvt)LTD ) நிறுவனம் சார்பில் எவரும் இன்று மன்றில் முன்னிலையாகாததால், அந்த நிறுவனத்துக்கு மன்றின் ஊடாக அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரருக்கு உத்தரவிட்ட மேல் நீதிமன்றம் மனு மீதான விசாரணையை வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் பியூல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்பவர் இந்த மனுவை தனது சட்டத்தரணி ரிஷிகேசனி சத்தியநாதன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த வாரம் சமர்ப்பித்தார்.
இதில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதலாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இரண்டாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் மூன்றாவது பிரதிவாதியாகவும் Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் நான்காவது பிரதிவாதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மனுதாரரின் சட்டத்தரணி ரிஷிகேசனி சத்தியநாதனின் ஏற்பாட்டில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மன்றில் முன்னிலையானார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை, மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர முதல்வர் சார்பில் சட்டத்தரணி இராஜரட்ணம் முன்னிலையானார். மனுதாரரின் சட்டத்தரணி மன்றில் இடைக்காலக் கட்டளை கோரி சமர்ப்பணம் செய்தார். எதிர்மனுதாரர்கள் மூவர் சாா்பில் முன்னிலையான சட்டத்தரணியும் சமர்ப்பணம் செய்தார்.
எனினும் நான்காவது எதிர்மனுதாரரான இடொற்கோ (Edotco Services Lanka (pvt)LTD ) நிறுவனம் சார்பில் எவரும் மன்றில் முன்னிலையாகாததால் இடைக்காலக் கட்டளை தொடர்பான விண்ணப்பத்தை மன்று ஆராய்வதை ஒத்திவைத்தது.