இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய இந்த நூதன போராட்டத்தின் போது, குறித்த கம்பத்தில் குழந்தை பொம்மை ஒன்றை கட்டித் தொங்கவிட்டு, ‘5-ஜி வேண்டாம் கம்பத்தை அகற்று’ போன்ற கோசத்துடன் இந்த நுாதன போராட்டத்தினை மக்கள் நடத்தியுள்ளனர்.
யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு அங்குள்ள பொது மக்கள் கடும் எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதாவது இத்திட்டத்தால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்து ஏற்படுமெனக் கருதியே எதிர்ப்பை தெரிவிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நகரின் பல வீதிகளிலும் பாரிய தூண்கள் நிறுவப்படுகின்றன. ஆயினும் தூண்களை நிறுவுவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதனால் சில இடங்களில் குறித்த பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் சில இடங்களில் தொடர்ந்தும் தூண்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
மாநகர சபையின் இந்த செயற்பாட்டைக் கண்டித்துள்ள மக்கள், மாநகர சபை மீது பல்வெறு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளனர். எனவே இச்செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காதவிடத்து மாநகர சபைக்கு எதிராக தொடர் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப் போவதாகவும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.