குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட வெலிக்கடைப் படுகொலையின் 36 வது நினைவு தினம் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மன்னார் மாவட்ட அலுவலகத்திலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தமிழ் உணர்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் இறந்த வீரர்களின் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு காரியாலத்திலும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தம் கருணாகரம் தலைமையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1983ஆம் ஆண்டு இதேநாளில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராட்ட முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் மற்றும் அந்த இனக் கலவர வாரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக முடக்கிவிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களில் உயிர்நீத்த பொது மக்களையும் நினைவு கூர்ந்து சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.