அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் 106 மில்லியன் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ’கப்பிற்றல் வன்’ என்னும் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களின் தகவல்களை ஹக்கிங் செய்ததாகக் கூறப்படும் நபரை நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடனட்டைகள், கடன்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை இந்த ’கப்பிற்றல் வன்’ நிறுவனம் வழங்குகின்றது
கடனட்டைகளை பெறுவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாக கப்பிற்றல் வன் தெரிவித்துள்ளது. ஆனால் ஹக்கிங் செய்த நபருக்கு கடனட்டைகளின் எண்கள் கிடைக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் திருட்டால் அமெரிக்காவில் 100 மில்லியன் பேரும் கனடாவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஜூலை 19 ஆம் திகதியன்று கண்டறியப்பட்டது.
நிறுவனத்தின் உள்கட்டமைப்பின் பாதுகாப்புத் தன்மையில் இருந்த குறைப்பாட்டை ஹக்கிங் செய்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என கப்பிற்றல் வன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெயர்கள், பிறந்த திகதி உட்பட கடன் மதிப்பெண்கள், அளவு, மீதமுள்ள தொகை, பொருட்களுக்கு பணம் செலுத்திய தகவல் மற்றும் தொடர்பு எண்கள் ஆகியவையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் மோசடிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும், இருப்பினும் இந்தத் தகவல் திருட்டுக் குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் வெளியிடப்படமாட்டாது என்றும், அவர்களுக்கு இலவச வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் டி. பெயார்பான்ங் (Richard de Fairbank), “இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டமை குறித்து நன்றியுடன் உணர்வதாகவும், தகவல் திருட்டுக் குறித்து தான் மிகவும் வருத்தம் தெரிவிப்பதாகவும்.” கூறினார்.
“இந்தச் சம்பவத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து நான் மன்னிப்புக் கோருகிறேன். இதைச் சரி செய்வது எனது கடமை” எனவும் தெரிவித்தார்.
இந்தத் தகவல் திருட்டுத் தொடர்பாக சீட்டல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மென்பொறியாளர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
பேஜ் தொம்ஸன் என்னும் அந்த 33 வயதான நபர், கணிணி மோசடி மற்றும் தாக்குதல் குற்றத்திற்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தொம்ஸனுக்கு அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் சிறைதண்டனையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என்று சட்டவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.