வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் நாளை குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என வெளியான தகவல்கள் உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாதவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர கூறினார்.
இவ்வாறு சமூக வலைத்தலங்களில் பரவிவரும் தகவல்கள் உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாதவை, எனினும் தமக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் பொருட்படுத்தாமல் இருக்கவில்லை என்றும் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளைய தினம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் பலரும் அச்சத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினராலோ புலனாய்வு தரப்பினராலே உறுதிப்படுத்தப் படாதவைகள்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெறும் எந்தவொரு தகவல்களையும் நாம் தட்டிக்களிப்பதில்லை மாறாக அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி பாதுகாப்பு தரப்பினர்களுடன் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அதேபோன்று பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எவ்வித குறைபாடுகளும் இன்றி நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.
விஷேடமாக இன்றைய ஞாயிறு சமய வழிபாடுகள் எவ்வித தடையின்றி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் மேலதிக வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது.
எனவே, பாதுகாப்பு தரப்பினரால் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளமால் அண்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்குமறும்” பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என நாடாளுமன்றில் சரத் பொன்சேகா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.