தற்போது தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. கத்தரி வெயிலும் கூட சேர்ந்துள்ளதால் மாநிலம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது.
ஆனால் அவ்வப்போது ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இருப்பினும் வெயில் குறைந்தபாடில்லை. அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலுக்குப் பிறகு நல்ல மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல், இரும்பேடு, சேவூர், பையூர் உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அத்துடன், சேலத்தில் மிதமான மழையும், திருவள்ளூர், கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மழையும் பெய்து வருகிறது.
இதனிடையே, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.