பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை அரசு மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென சமூக அமைப்புகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே குறித்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்கள் மற்றும் சந்தேக மரணங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.
மேலும் பொள்ளாச்சி அரசு வைத்தியசாலையிலும் சில ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் குற்றவாளிகளான சபரி ராஜனின் வீடு, திருநாவுக்கரசுவின் பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்குடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவிகள் மற்றும் இளம்பெண்களை காதலிப்பதாக சமூக வலைத்தளங்களின் ஊடாக கூறி, அவர்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி ஈடுபட்டு அதனை காணொளியாக பதிவு செய்து பணம் பறிக்கும் செயற்பாட்டில் பொள்ளாச்சியில் ஒரு குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் சில பெண்கள் தற்கொலையும் செய்து கொண்டனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.