தாய்லாந்தை சுமார் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ், கடந்த 2016-ம் ஆண்டு ஒக்டோபரில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் மஹா வஜிரலோங்கோர்ன் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
இவரின் முடிசூட்டு விழா, தாய்லாந்து முறைப்படி இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு முடிசூட்டு விழா நடப்பதால், நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
புதிய மன்னரின் முடிசூட்டு விழா, மூன்று நாள்களுக்கு நடைபெறும். இன்று காலை, தாய்லாந்து நாட்டின் புத்த மதம் மற்றும் இந்து பிராமண முறைப்படி பாரம்பரிய நடைமுறைகள் ஆரம்பமாகின.
மன்னருக்கே உரிய உடை அணிந்தபடி ஏழு வெண்குடைகள் சேர்ந்த அரியாசனத்தில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு ராஜ கிரீடம், அரச பாதணிகள், விசிறி, ராஜ வாள் மற்றும் செங்கோல் போன்ற ஐந்து அரசுரிமை சின்னங்கள் வழங்கப்பட்டன.
இறுதியில் கிரீடம் அணிவிக்கப்பட்டு, மன்னராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் பதவியேற்பு பிரமாணத்தை வாசித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், இன்று நடக்கும் விழாவே முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கியமான நடைமுறைகள் அனைத்தும் இன்று நடைபெறும்.
நாளை ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இடம்பெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை நாள் முழுவதும் மன்னர் நாட்டு மக்களைச் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.