தற்கொலை குண்டு தாரியின் வாகனமே கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவரின் குறித்த வாகனத்தில் தேவாலயத்திற்கு வந்தார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கப்பெற்ற சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தவேளை, குறித்த வாகனத்திலேயே முதல்நாள் தற்கொலை குண்டுதாரி கொச்சிக்கடையில் தேவாலயத்திற்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.