முஸ்லிம் மதத்தைச் சார்ந்த குறித்த இரு அமைப்புகளும் தடைசெய்யப்பட்டுள்ளதோடு, முகத்தை மறைக்கும் அபாயாக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளன. ஹிஜாப் எனப்படும் காதை மூடி அணியும் ஒருவகையான ஆடையையும் அகற்றுமாறு அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலை போன்ற பல இடங்களில் முஸ்லிம் பெண்கள் பணிக்கப்படுவதாக நாளாந்தம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் முஸ்லிம் மக்கள், தாக்குதலைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் மக்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இது பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக பிரிவினையை அதிகரிக்கச் செய்யுமென அம்மக்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ் மக்களுக்கும் முன்பு இதுவே நடந்ததென்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, முஸ்லிம்கள் மீதான சந்தேகம் அதிகரிக்கும்போது அது உள்ளூர் தாக்குதலுக்கு வித்திடுமென எச்சரித்துள்ளார். அது மிகவும் ஆபத்தானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் சகல மதத் தலைவர்களுடனும் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவேவா தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டின் சுமூக நிலையைப் பேண சகல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.