அகங்காரம்தான் துரியோதனனின் அழிவுக்கு காரணம் என பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி பிரசாரமொன்றில் பேசும்போது ராஜீவ் காந்தியை விமர்சனம் செய்தார்.
இதற்கு, அரியானாவின் ஹிசார் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் மேற்கொண்ட போதே பிரியங்கா காந்தி இவ்வாறு எச்சரித்தார்.
அவர் தெரிவிக்கையில், “வேறு எந்தப் பிரச்சினையும் கிடைக்காததால் என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார்கள். இந்த நாட்டில் ஒருபோதும் அகங்காரத்திற்கு மன்னிப்புக் கிடையாது. வரலாற்று ஆதாரமும் இதுதான். மகாபாரதமும் இதற்கு ஆதாரமாகும்.
பிரதமர் மோடியிடம் இருக்கும் அகங்காரம்தான் துரியோதனனிடமும் இருந்தது. பகவான் கிருஷ்ணன் துரியோதனனிடம் பேச முயற்சி செய்தபோது, அவன் கிருஷ்ணனை சிறைப்பிடிக்க முயற்சித்தான்” என்று கூறியுள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து பிரதமர் மோடி பேசும்போது, “உங்கள் தந்தை (ராஜீவ் காந்தி) கறைபடியா கரத்துக்கு சொந்தக்காரர் (மிஸ்டர் கிளீன்) என அவரது சேவகர்களால் கருதப்பட்டார். ஆனால் அவரது வாழ்க்கையோ ‘ஊழல் நம்பர் வன்’ என்ற நிலையில்தான் முடிந்தது” என்றார்.
கடந்த 1980களில் பரபரப்பாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்தியை தொடர்புபடுத்தியே பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.
இதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.