பிரிந்த பின்னர், தமிழ் தேசிய இராணுவம் என்பதை உருவாக்கி அதனை தடைசெய்த பொழுது ஆயதங்கள் முஸ்லிம்களிடம் வர்த்தகத்திற்காக விநியோகிக்கப்பட்டது என்பது உண்மையான விடயம் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனிடையே சில ஆயுதங்கள் இவ்வாறு பரிமாறப்பட்டிருக்கலாம்.
எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நாம் பிரிந்தபோது எம்மிடமிருந்த ஆயுதங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதும் மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டதுமாகவே இருக்கின்றது.
சிலவேளை குறிப்பிட்ட சில ஆயுதங்கள் தமிழ் தேசிய இராணுவம் என்பதை உருவாக்கி அதனை தடைசெய்த போது அந்த ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் வர்த்தகத்திற்காக விநியோகிக்கப்பட்டது என்பது உண்மையான விடயம்.
ஆகவே அந்த ஆயுதங்கள் ஊடாகவும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. உதாரணமாக வவுணதீவிலே இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை இதன் ஆரம்பமாக எடுத்துக்கொள்ளலாம்.
எனவே பயங்கரவாதிகள் புலிகளின் ஆயுதங்களை வைத்திருப்பதை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சில ஆயுதங்கள் அவர்களிடம் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.