இறுதியாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பல்கலை மாணவனின் இறுதிக் கிரியை இன்று (வெள்ளிக்கிழமை) மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு நகரில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பரமேஸ்வரன் பிரஸ்டீன் (வயது-27) என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த இளைஞனின் மரண விசாரணைகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்று பின்னர் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட குறித்த இளைஞனின் உடல் ரெட்ணம் வீதி, கருவப்பங்கேணியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை மத அனுஸ்டானங்கள் நடைபெற்றதன் பின்னர் ஊறணி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த இளைஞனின் உயிரிழப்பையடுத்து 29 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.