இதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம்பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயற்படுத்த முடிவு செய்துள்ளன.
சோழநாடு சோறுடைத்து என்ற பெருமை பெற்றிருக்கும் ‘நெற்களஞ்சியமான’ காவிரி பாசனப் பகுதி மக்களை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்குத் தள்ளிவிட மோடி அரசு மூர்க்கத்தனமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்த முனைந்துள்ளது. எடப்பாடி அரசு, காவிரி டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைத்து வருகிறது.
காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
வேளாண்மையை அழித்து பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் இலட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேரின் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?
தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பழிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது. காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.
எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.