யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பேரவையின் கூட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது, மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஆராயப்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, அவர்களை விரைந்து விடுதலை செய்வதற்குச் சாத்தியமான வழிமுறைகளினூடாக முயற்சிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டமா அதிபருடனும், யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியுடனும் சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோருக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
நேற்று யாழ். பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது படத்தை வைத்திருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.